KALVISOLAI TNPSC

Tuesday 2 June 2020

KALVISOLAI CURRENT AFFAIRS - JANUARY 2020 - கல்விச்சோலை நடப்பு நிகழ்வுகள் - ஜனவரி 2020

KALVISOLAI CURRENT AFFAIRS - JANUARY 2020 - கல்விச்சோலை நடப்பு நிகழ்வுகள் - ஜனவரி 2020
ஜனவரி 1:  இந்தியாவின் முதல் பாதுகாப்புப் படைகளின் தலைமைப் படைத்தலைவராக ஜெனரல் பிபின் ராவத் பதவியேற்றார். முப்படைகளுக்கான இந்தப் படைத்தலைவர் பதவி இந்தியாவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. ராணுவப் படைத்தளபதியாகப் பதவி வகித்துவந்த பிபின் ராவத், டிச. 31 அன்று ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து, நாட்டின் பாதுகாப்புப் படைகளின் தலைமைப் படைத்தலைவராகப் பதவியேற்றார்.

ஜனவரி 1: சாதாரண வகுப்புப் பயணிகளுக்கான கட்டணம் ஒரு கிலோமீட்டருக்கு ஒரு பைசாவும், அதிவிரைவு ரயில்களுக்கான கட்டணம் ஒரு கிலோமீட்டருக்கு இரண்டு பைசாவும், முதல் வகுப்புப் பயணிகளுக்கான கட்டணம் ஒரு கிலோமீட்டருக்கு நான்கு பைசாவும் உயர்த்தப்படுவதாக ரயில்வே துறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 2: ஃப்ளோரென்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் 200-ம் பிறந்த நாளை நினைவுகூரும்விதமாக, 2020-ம் ஆண்டைச் செவிலியர்கள், தாதிகளுக்கான ஆண்டாக உலகச் சுகாதார மையம் (WHO) அறிவித்துள்ளது. இதையொட்டி, ‘உலகச் செவிலியர்களின் நிலை’ அறிக்கையை முதன்முறையாக உலகச் சுகாதார மையம் தயாரித்துவருகிறது. உலகில் செவிலியர்கள், சுகாதார ஊழியர்களுக்கான தேவை 50 சதவீதத்துக்கும் அதிகமாக இருப்பதாக உலகச் சுகாதாரம் மையம் தெரிவித்துள்ளது.

ஜனவரி 4: கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் 2003 முதல் விளையாடிவரும் இவர், இதுவரை 29 டெஸ்ட் போட்டிகள், 120 ஒரு நாள் போட்டிகள், 24 டி20 போட்டிகளில் விளையாடியிருக்கிறார்.

ஜனவரி 5: டெல்லியில் உள்ள ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் இந்து ரக்ஷா தளம் அமைப்பைச் சேர்ந்தவர்கள், முகமூடி அணிந்து வந்து பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள்மீது தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் மாணவர்களும் பேராசியர்களும் படுகாயம் அடைந்தனர். பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இந்த வன்முறைக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்த வன்முறைக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஜனவரி 6: இந்தியத் தரவுத் தொடர் செயற்கைக்கோள் அமைப்பை (IDRSS) உருவாக்குவதற்கு இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இந்தப் புதிய தரவுத் தொடர் செயற்கைக்கோள்கள், இந்திய செயற்கைக்கோள்களுடன் தொடர்பில் இருப்பதற்காக வடிவமைக்கப்படுகின்றன. 2022-ல் ‘ககன்யான்’ திட்டத்துக்காக விண்வெளிக்குச் செல்லும் விண்வெளி வீரர்கள் பூமியுடன் எப்போதும் தொடர்பில் இருப்பதற்கு இந்தத் தரவுத் தொடர் செயற்கைக்கோள் அமைப்பு உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 6: டெல்லியின் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் பிப்ரவரி 8 அன்று நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 11 அன்று நடைபெறவிருக்கிறது. 70 சட்டப்பேரவை இடங்களுக்கு நடக்கும் இந்தத் தேர்தலில் 1.46 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க இருக்கிறார்கள்.

ஜனவரி 7: மத்திய புள்ளியியல் அலுவலகம், 2020-ம் நிதியாண்டுக்கான உள்நாட்டு உற்பத்தி (GDP) 5 சதவீதமாக இருக்கும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. உற்பத்தித் துறை எதிர்கொண்டுவரும் சரிவே, உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சிக்குக் காரணம் என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது. 2018-19-ம் ஆண்டில், 6.9 சதவீதத்தில் வளர்ச்சியடைந்த உற்பத்தித்துறை, 2019-20-ம் ஆண்டில் 2 சதவீதம் மட்டுமே வளர்ச்சியடைந்துள்ளது.

ஜனவரி 7: சர்வதேச வானிலை அமைப்பு (IMO), 2019-ம் ஆண்டின் ‘பருவநிலை அறிக்கை’யை வெளியிட்டுள்ளது. 2019-ல், பருவநிலை மாற்றத்தால் இந்தியாவில் 1,659 பேர் உயிரிழந்திருப்பதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது. 1901-ம் ஆண்டுக்குப் பிறகு, ஏழாம் வெப்பமான ஆண்டாக 2019 அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 9: 2020-21-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் காலக் கூட்டத்தொடர், ஜனவரி 31 முதல் பிப்ரவரி 11 வரையும் மார்ச் 2 முதல் ஏப்ரல் 3 வரையும் இரண்டு கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. பட்ஜெட் தொடர்பான ஆலோசனைகளைப் பகிர்ந்துகொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடி தன் டிவிட்டர் பக்கத்தில் மக்களிடம் கோரியுள்ளார்.

ஜனவரி 9: உலகப் பொருளாதார வளர்ச்சி 2.5 சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கியின் ‘உலகளாவிய பொருளாதார வளர்ச்சி’ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2008-9-ம் ஆண்டில் 3.1 சதவீதமாகப் பொருளாதார வளர்ச்சி கணிக்கப்பட்டிருந்தது. அதற்குப் பிறகு, இந்த நிதியாண்டில்தான் குறைவான பொருளாதார வளர்ச்சி கணிக்கப்பட்டுள்ளது. வளரும் நாடுகளில் மூன்றில் ஒரு சதவீத நாடுகள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

ஜன.13: உணவு விலையேற்றம் 2019, டிசம்பரில் 14.12 சதவீதம் அளவுக்கு அதிகரித்திருப்பதாக மத்தியப் புள்ளியியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2019, நவம்பரில் 10.01 சதவீதமாக இருந்த உணவு விலையேற்றம் ஒரே மாதத்தில் நான்கு சதவீதம் அதிகரித்துள்ளது.

ஜன.13: முன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷரஃப்புக்குச் சிறப்பு நீதிமன்றம் விதித்த மரண தண்டனை அரசியலமைப்புக்கு எதிரானது என்று தெரிவித்த லாகூர் உயர் நீதிமன்றம், அந்தத் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

ஜன. 14: இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய துணை ஆளுநராக மைக்கேல் தேவபிரதா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் மூன்று ஆண்டுகள் இந்தப் பதவியில் நீடிப்பார் என்று அமைச்சரவை நியமனக் குழு தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக இருந்த விரால் ஆச்சார்யா ஜூலை மாதம் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து தற்போது புதிய துணை ஆளுநராக மைக்கேல் தேவபிரதா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜன.15: உலகப் பொருளாதார அமைப்பு (WEF), உலகளாவிய இடர்கள் அறிக்கையில் பருவநிலை மாற்றம், புவிசார் அரசியல் கொந்தளிப்பு, அதிகரித்துவரும் பொருளாதாரத் தேக்கம், பாரபட்சமான டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி, மருத்துவ அமைப்புகளின் மீதான ஆழுத்தம் ஆகிய இடர்களை வரும் ஆண்டுகளில் உலக நாடுகள் சந்திக்கும் என்று அறிவித்துள்ளது.

ஜன.15: ரஷ்யாவின் பிரதமராக இருந்த டிமிட்ரி மேத்வதேவ் தன் பதவியை ராஜினாமா செய்தார். மேத்வதேவின் அமைச்சரவை தன் இலக்குகளை அடையத் தவறிவிட்டதாக அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் புதிய பிரதமராக மிகைல் மிஷ்ஹுஸ்டின் பெயரை ரஷ்ய அதிபர் புதின் முன்மொழிந்துள்ளார்.

ஜன. 15: 2018-19-ம் ஆண்டில் தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் பா.ஜ.க., ரூ. 1,450 கோடியை நிதியாகப் பெற்றுள்ளதாக ஜனநாயகச் சீர்திருத்த அமைப்பு (ADR) தெரிவித்துள்ளது. 2018-19-ல் பா.ஜ.க., மொத்தமாக ரூ. 2,410 கோடியை நிதியாகப் பெற்றுள்ளது. காங்கிரஸ் மொத்தமாக ரூ. 918 கோடியை நிதியாகப் பெற்றுள்ளது. இதில் தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் ரூ. 383 கோடியை நிதியாகப் பெற்றுள்ளது.

ஜன. 16: உலகின் வலுவான பாஸ்போர்ட் கொண்ட நாடுகளின் பட்டியலை ‘ஹென்லே’ வெளியிட்டுள்ளது. சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்புகளின் (IATA) தரவுகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் பட்டியலில் ஜப்பான் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 199 நாடுகள் இடம்பெற்றிருந்த இந்தப் பட்டியலில் இந்தியா 84-ம் இடத்தில் உள்ளது. சிங்கப்பூர், ஜெர்மனி ஆகியவை முறையே இரண்டாம், மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளன.

ஜன.17: இந்தியாவின் தொலைத்தொடர்பு செயற்கைக் கோள் ஜி-சாட் 30 தென் அமெரிக்காவின் கோரோவ், கினியா விண்வெளி மையத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. நாட்டின் தொலைக்காட்சி, தொலைத்தொடர்பு சேவைகளை மேம்படுத்துவதற்காக இந்தச் செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது. 3,357 கிலோ எடைகொண்ட இந்தச் செயற்கைக்கோள் 15 ஆண்டு ஆயுட்காலத்தைக் கொண்டுள்ளது.

ஜன. 20: ஆந்திரப் பிரதேசத்துக்கு மூன்று தலைநகரங்களை உருவாக்கு வதற்கான மசோதா அம்மாநிலச் சட்டப்பேரவையின் கீழவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், சட்டபேரவையின் மேலவையில் நிறைவேற்றப் படவில்லை. விசாகப்பட்டினத்தை நிர்வாகத் தலைநகராகவும், அமராவதியைச் சட்டப்பேரவைத் தலைநகராகவும், கர்னூலை நீதித்துறை தலைநகராகவும் மாற்ற வழிவகை செய்யும் வகையில் இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.

ஜன. 20: சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு, 2020-ம் ஆண்டுக்கான ‘உலக வேலைவாய்ப்பு, சமூகப் பார்வை போக்குகள்’ அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், 2020-ல் உலகளாவிய வேலை வாய்ப்பின்மையின் எண்ணிக்கை 25 லட்சம் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், உலகில் 18.8 கோடிப் பேர் வேலைவாய்ப்பில்லாமல் இருப்பதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

ஜன. 22: 2019-ம் ஆண்டுக்கான ஜனநாயகப் பட்டியலைப் பொருளாதாரப் புலனாய்வுப் பிரிவு (EIU) வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் நார்வே, ஐஸ்லாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. இந்தியா, கடந்த ஆண்டைவிடப் பத்து இடங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு 51-ம் இடத்தில் இருக்கிறது.

ஜன.22: குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு, மசோதாவுக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று தெரிவித்தது. இந்த மசோதா தொடர்பாக நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

ஜன. 22: ‘ககன்யான்’ திட்டத்துக்கு முன்னோட்டமாக முதல்முறையாக ‘வியோம் மித்ரா’ என்னும் பெண் மனித ரோபாட் விண்ணில் செலுத்துவதற்கு இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. ‘வியோம் மித்ரா’ என்றால் வானில் இருக்கும் நண்பன் என்று அர்த்தம். 2020 டிசம்பர், 2021 ஜூலை என இரண்டு முறை இந்த மனித ரோபாட் பரிசோதனைக்காக விண்ணில் செலுத்தப்படவிருக்கிறது.

ஜன.22: கிரேக்க நாட்டின் முதல் பெண் அதிபராக கத்ரீனா சக்கெல்லரோபோலு தேர்வு செய்யப்பட்டுள்ளார். கிரேக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் 294 பேரில் 261 பேரின் வாக்குகளைப் பெற்று அவர் அதிபராகத் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். சுற்றுச்சூழல், அரசியலமைப்புச் சட்ட நிபுணரான இவர், வரும் 2020, மார்ச் 13 அன்று கிரேக்க அதிபராகப் பதவியேற்கிறார்.

ஜன.22: 2020, உலகளாவிய திறன் போட்டி பட்டியலை உலகப் பொருளாதா அமைப்பு (WEF) வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியா கடந்த ஆண்டைவிட எட்டு இடங்கள் முன்னேறி, தரவரிசையில் 72-ம் இடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.


ஜன. 24: தேசிய மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு (நீட்) விண்ணப்பிக்கும் தமிழ்நாட்டின் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு கடுமையாகச் சரிந்துள்ளது. 2019-ல் 17,630 அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். ஆனால், இந்த ஆண்டு அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த 7,000 மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கின்றனர்.

ஜன.27: குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானம் மேற்கு வங்கச் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அத்துடன், தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (NPR), தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) ஆகியவை திரும்பப் பெறப்பட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கேரளம், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து மேற்கு வங்கம் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.

ஜன. 29: நாட்டின் வெளியுறவுத் துறையின் புதிய செயலராக ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்கலா பதவியேற்றார். வெளியுறவுத் துறை செயலராக இருந்த விஜய் கோகலேவின் பதவிக்காலம் நிறைவடைந்ததையொட்டி தற்போது புதிய செயலராக ஹர்ஷ் வர்தன் பொறுப்பேற்றார். இவரது பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் நீடிக்கும்.

ஜன.30: கரோனா வைரஸ் காரணமாக உலகளாவிய சுகாதார நெருக்கடியை உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. உலகத்துக்கு முக்கியமான ஆபத்தாக கரோனா வைரஸ் உருவாகியிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. யாரும் சீனாவுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜன.30: சபரிமலை உள்ளிட்ட பல்வேறு மத வழிபாட்டுத் தலங் களுக்குப் பெண்கள் செல்வதற்கு அனுமதி வழங்குவது தொடர்பான வழக்கை ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பல்வேறு மத வழிபாட்டுத் தலங்களில் கடைப்பிடிக்கப்பட்டுவரும் பாலின சமத்துவமின்மை குறித்த வழக்குகள் அனைத்தையும் இந்த அமர்வு பிப்.3 முதல் விசாரிக்கத் தொடங்கியுள்ளது.

ஜன.30: உலகில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் நகரங் களில் பெங்களூரு முதலிடத்தில் இருக்கிறது. ‘2019 உலகளாவிய போக்குவரத்து நெரிசல் பட்டியலை’ நெதர்லாந்தைச் சேர்ந்த டாம்-டாம் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 57 நாடுகளைச் சேர்ந்த 416 உலக நகரங்கள் இடம்பெற்றிருந்த இந்தப் பட்டியலில், முதல் பத்து இடங்களில் நான்கு இந்திய நகரங்கள் (மும்பை, புனே, டெல்லி) இடம்பெற்றுள்ளன.

ஜன.31: ரூ.30-35 கோடி செலவில், 500 கிலோகிராம் எடையில் செயற்கைக்கோள்களைத் தாங்கிச்செல்லும் ஏவுகணைகளை உருவாக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. வரும் நான்கு மாதங்களுக்குள் இந்தத் திட்டம் தொடங்கப்படுகிறது. அடுத்த ஆண்டுகளில் இந்தத் திட்டத்தின்கீழ் 500 பிஎஸ்எல்வி ஏவுகணைகள் தயாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜன. 31: ஐரோப்பிய யூனியனிலிருந்து 47 ஆண்டுகளுக்குப் பிறகு, வெளியேறியிருக்கிறது பிரிட்டன். 2016-ல் கொண்டுவரப்பட்ட பிரெக்ஸிட் வாக்கெடுப்பு, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐரோப்பிய யூனியனிலிருந்த இரண்டாம் பெரிய பொருளாதார நாடான பிரிட்டன் வெளியேறியிருப்பது உலகில் பல்வேறு தளங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment